500 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன்
மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் 500 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் வட்டியில்லா கடனை ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கோலார் தங்கவயல்:
வட்டியில்லா கடன்
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை விவேக்நகரில் மாவட்ட கூட்டுறவு வங்கி சார்பில் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர் கோவிந்த்கவுடா, நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் 500 பேருக்கு ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ தலா ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் உதவி தொகை வழங்கினார்.
500 பேர் பயனடைவார்கள்
அப்போது பேசிய அவர் கூறியதாவது:- கோலார் தங்கவயலில் தங்கச் சுரங்கம் மூடிய பின்னர் தொழிலாளிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் வேலை தேடி பெங்களூருவிற்கு செல்கின்றனர். பெண்கள் வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது. எனவே பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கும், சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் மாவட்ட கூட்டுறவு வங்கி சார்பில் வட்டியில்லா கடன் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டது. அதை சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் சரியாக செலுத்திவிட்டனர். இந்த முறை ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 500 பெண்கள் பயன் பெறுவார்கள்.
சுயதொழில் செய்யவேண்டும்
இந்த பணத்தை வைத்து பெண்கள் சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழவேண்டும். கடன் தொகையை சரியாக செலுத்தவேண்டும். மாதம்தோறும் நீங்கள் செலுத்தும் தொகை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வரவு வைக்கப்படும். கொரோனா காலக்கட்டத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் நீங்க ஆதிபராசக்தி கோவிலுக்கும், ஆண்கள் சபரிமலை கோவிலுக்கும் இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த முறை வேளாங்கண்ணிக்கு அழைத்து செல்லும்படி பலர் கூறுகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.