அம்பேத்கரை அவமதித்த விவகாரம்:அரசு மருத்துவக்கல்லூரி டீன் சஞ்சீவ் மீது விசாரணை தொடங்கியது
அம்பேத்கரை அவமதித்த விவகாரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சஞ்சீவ் மீது டாக்டர்கள் குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கொள்ளேகால்:-
அரசு மருத்துவக்கல்லூரி
சாம்ராஜ்நகர் டவுனில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் டீன் மற்றும் இயக்குனரான டாக்டர் சஞ்சீவ் இருந்து வருகிறார். இவர் கடந்த குடியரசு தினத்தன்று மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அம்பேத்கரின் உருவப்படத்தை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று டாக்டர் சஞ்சீவ் கூறியதாக சொல்லப்படுகிறது.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட டாக்டர் சஞ்சீவுக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் மாவட்ட கலெக்டரிடமும் புகார்கள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் குழு
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினை குறித்து தலைமை செயலாளர் வந்திதா சர்மாவிடம் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் தற்போது மருத்துவக்கல்வி துறையைச் சேர்ந்த டாக்டர்கள் மஞ்சுநாத், ஹர்ஷா, கிரீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இப்பிரச்சினை குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அவர்கள் இதுபற்றி விசாரித்து அதன் அறிக்கையை தலைமை செயலாளர் வந்திதா சர்மாவிடம் சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் அடிப்படையில் அவர் டாக்டர் சஞ்சீவ் மீது நடவடிக்கை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.