ரோகிணி சிந்தூரி பற்றி அவதூறு பரப்பி வந்த நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு; மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவு


ரோகிணி சிந்தூரி பற்றி அவதூறு பரப்பி வந்த நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு; மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவு
x

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

அதிகாரிகள் இடையே மோதல்

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ரோகிணி சிந்தூரி என்பவர் இருந்து வருகிறார். கடந்த மாதம் ரோகிணி சிந்தூரியின் ரகசிய புகைப்படங்களை, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். மேலும், ரோகிணி சிந்தூரி தனது ரகசிய புகைப்படங்களை மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அரசு பெண் அதிகாரிகள் இடையே மோதல் உண்டானது. அவர்களது மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இருவரையும் அதிரடியாக இடமாற்றம் செய்து கர்நாடக அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.

மேலும் கர்நாடக அரசு, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்று ரோகிணி சிந்தூரி மற்றும் ரூபா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ரூபா, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாவுக்கு தடை

இதற்கிடையே தனக்கு எதிராக அவதூறாக பேசுவதற்கு ரூபாவுக்கு தடை விதிக்குமாறு கோரி ரோகிணி சிந்தூரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்ணை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், இதனால் தன்னை அவர், மானபங்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னைப்பற்றி அவதூறாக பேசவோ அல்லது தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடவோ ரூபாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். ரூ.1 கோடி மான நஷ்டஈடு வழங்க கோரியும் தனது மனுவில் கூறி இருந்தார். இந்த நிலையில் ரூபாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தொடர்பாக ரோகிணி சிந்தூரி, கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

அவதூறு வழக்கு

அப்போது அவர் நீதிபதியிடம் கூறுகையில், 'என்னை பற்றி அவதூறாக பேசுவதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. சாம்ராஜ்நகரில் நடைபெற்ற ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் குறித்து அரசு ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டது' என்றார்.

இதையடுத்து நீதிபதி பேசுகையில், 'ரோகிணி சிந்தூரி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் ரூபா மீது ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.


Next Story