ஐ.பி.எஸ். அதிகாரி பெயரில் வாலிபரை மிரட்டி ரூ.16 லட்சம் பறிப்பு


ஐ.பி.எஸ். அதிகாரி பெயரில் வாலிபரை மிரட்டி ரூ.16 லட்சம் பறிப்பு
x

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறியதுடன், ஐ.பி.எஸ். அதிகாரி பெயரில் மிரட்டி வாலிபரிடம் ரூ.16 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நண்பர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சாம்ராஜ்பேட்டை:

இளம்பெண்ணுடன் பழக்கம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் 20 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக சாந்தினி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பறிமாறிக் கொண்டு பேசி வந்தனர். மேலும் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலமாகவும் 2 பேரும் பேசினார்கள். அப்போது அந்த வாலிபர் நிர்வாணமாக இளம்பெண் முன்பு தோன்றியதாக தெரிகிறது.

இதனை இளம்பெண் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, வாலிபருக்கு அனுப்பி வைத்திருந்தார். அதன்பிறகு, ஓட்டலில் தனியாக சந்தித்து பேசலாம், அங்கேயே தங்கலாம் என்று இளம்பெண், வாலிபரிடம் கூறி இருக்கிறார். இதற்கு வாலிபர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக இளம்பெண் தன்னை தொடர்புகொள்ள முடியாதபடி வாலிபர் செய்துவிட்டார்.

ஐ.பி.எஸ். அதிகாரி பெயரில் மிரட்டல்

இதுபற்றி தனது நண்பர்களான சுனில், ஹேமந்த், பிரவீன் ஆகிய 3 பேரிடமும் அந்த வாலிபர் தெரிவித்தார். அத்துடன் இளம்பெண் அனுப்பிய தன்னுடைய ஆபாச புகைப்படம், வீடியோக்களையும் நண்பர்களுக்கு அனுப்பினார். இந்த நிலையில், இளம்பெண்ணான சாந்தினி, வாலிபர் மீது ஐ.பி.எஸ். அதிகாரியிடம் புகார் அளித்திருப்பதாகவும், ஆபாச வீடியோ, புகைப்படங்களை கொடுத்திருப்பதாகவும் சுனில் உள்பட 3 பேரும் வாலிபரான நண்பரிடம் கூறினார்கள்.

அத்துடன் ஐ.பி.எஸ். அதிகாரியையும், இளம்பெண்ணையும் சமாதானப்படுத்தி விட்டோம், உனது வீடியோ, புகைப்படங்கள் வெளியாகாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதனை கொடுத்தால் சரி செய்து விடலாம் என்று வாலிபரிடம் சுனில் உள்பட 3 நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.

3 நண்பர்களுக்கு வலைவீச்சு

இதனை நம்பிய வாலிபரும் தனது நண்பர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். தனக்கு சொந்தமான 99 கிராம் தங்க நகைகளையும் விற்று பணம் கொடுத்தார். ஒட்டுமொத்தமாக ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை வாலிபர் கொடுத்திருந்தார். அதன்பிறகும் ஐ.பி.எஸ். அதிகாரி பெயரை பயன்படுத்தி, அவர் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி வாலிபரிடம் தெரிவித்தனர். நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த வாலிபர் திலக்நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் சாம்ராஜ்பேட்டை பகுதியில் நடந்திருப்பதால், தங்களது போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கை சாம்ராஜ்பேட்டைக்கு மாற்றினார்கள். போலீஸ் விசாரணையில், ஐ.பி.எஸ். அதிகாரி பெயரில் சுனில், ஹேமந்த், பிரவீன் 3 பேரும் சேர்ந்து வாலிபரை மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. இளம்பெண்ணுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சாம்ராஜ்பேட்டை போலீசார் தலைமறைவான சுனில், ஹேமந்த், பிரவீனை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story