கல்யாண கர்நாடகத்தில் பா.ஜனதா செல்வாக்கை இழக்கிறதா?
மூத்த தலைவர்கள் கட்சி மாறுவதால் கல்யாண கர்நாடகத்தில் பா.ஜனதா செல்வாக்கை இழக்கிறதா?
கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஜனதா தளம்(எஸ்) கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தனது 124 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
இதுவரை பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பா.ஜனதாவின் இந்த தாமதம் அந்த கட்சியை சேர்ந்த சிலரிடம் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மூத்த தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் சிலரை பா.ஜனதா ஓரம் கட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் பலர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேருவதற்கு முன் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் யாதகிரி தொகுதியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஏ.பி.மாலகாரெட்டி. இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
யாதகிரி தொகுதியில் இவர் மூத்த அரசியல்வாதி மட்டுமின்றி, செல்வாக்கு மிக்கவர் என்று இன்று வரை கூறப்படுகிறது. இருப்பினும் பா.ஜனதாவில் சேர்ந்தது முதல் இவர் ஓரம்கட்டப்பட்டு வந்துள்ளார். மேலும் இந்த தேர்தலுக்கும் முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவருக்கு பதிலாக தற்போதைய எம்.எல்.ஏ. வெங்கடரெட்டி முத்தாலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர் காங்கிரசில் இணைய முயற்சி மேற்கொண்டு வந்தார். இதற்கு முன்பு பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி பாபுராவ் சின்சனசூர் அக்கட்சியில் இருந்து விலகினார். இவரும் ஏற்கனவே காங்கிரசில் இருந்து சென்றவர்தான். மீண்டும் பாபுராவ் சிஞ்சனசூர் காங்கிரசிற்கு வந்திருப்பது, பா.ஜனதாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
பாபுராவ் சிஞ்சனசூரை தொடர்ந்து ஏ.பி.மாலகாரெட்டி காங்கிரசில் இணைய முயற்சித்திருப்பது, கல்யாண கர்நாடகாவில், பா.ஜனதா படுதோல்வியை சந்திக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் காங்கிரசும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. இதற்காக யாதகிரி தொகுதியில் இன்னும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே அந்த தொகுதியில் மாலகாரெட்டிக்கு காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஏ.பி.மாலகாரெட்டிக்கும் அந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் வெங்கடரெட்டிக்கும் ஒரே அளவிலான செல்வாக்கு இருக்கிறது.
இருப்பினும் ஏ.பி. மாகலாரெட்டி கல்யாண கர்நாடகத்தில் போட்டியிடுவது, காங்கிரசிற்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த முறை யாதகிரி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள மேலும் சில தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. அதற்காக காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. அதே நேரம் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே 2 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்திவிட்டது.
அதாவது தச்சனாபுராவில் சரணபசப்பா கவுடா, சுராபுராவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ வெங்கடப்பா நாயக்கிற்கு டிக்கெட் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் யாதகிரி, குருமித்கல் தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியிருக்கிறது. பா.ஜனதாவில் இருந்து வந்த 2 பேருக்கும் இந்த தொகுதிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. காங்கிரசில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் அவர்களது பெயர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வாக்காளர்கள் மட்டுமின்றி பா.ஜனதா கட்சியும் மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.