இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா?- டி.கே.சிவக்குமார் கேள்வி
இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா? என டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தாங்கள் இந்துக்கள் என்று கூறி வருகின்றனர். இந்துத்வா பற்றி பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எனக்கு சிவனின் மகன் குமாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பெயர் சித்தராமையா ஆகும். காங்கிரஸ் கட்சியினர் தங்களது பெயரை கல், மண் என்று வைத்து கொண்டுள்ளோமா?. 25 ஆண்டுக்கு முன்பு சோனியா காந்தி வீட்டில் நடந்த உகாதி பண்டிகைக்கு சென்றிருந்தோம். சோனியா காந்தி ஒவ்வொரு ஆண்டு உகாதி கொண்டாடி வருகிறார். இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா?. காங்கிரசுக்கு இந்துத்வா சொந்தம் இல்லை என்று பா.ஜனதா கூற எந்த தகுதியும் இல்லை.
வீரசைவ-லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் பேசியது குறித்து நான் பேசவிரும்பவில்லை. தவறு செய்ததை ஒப்பு கொள்வதில் தவறு இல்லை. சமுதாயத்தை உடைக்கும் முயற்சி வேண்டாம் என்று, இதற்கு முன்பு நான் மந்திரியாக இருந்த போதும் கூறினேன். தற்போதும் அதை தான் கூறுவேன். வீரசைவ-லிங்காயத் சமுதாய விவகாரத்தில் காங்கிரஸ் நடந்து கொண்டது குறித்து நான் பகிரங்க மன்னிப்பு கேட்டு இருந்தேன். எந்த ஒரு சமுதாய விவகாரத்திலும் கை வைக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.