மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் திறனை மதிப்பிடுவது சாத்தியமா?; கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் திறனை மதிப்பிடுவது சாத்தியமா? என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு:
பொதுத்தேர்வு
கர்நாடக அரசு கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் 12-ந் தேதி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் 2022-2023-ம் ஆண்டு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முறையை மாற்ற இருப்பதாக தெரிவித்து இருந்தது. மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்த இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
இதை எதிர்த்து கர்நாடகா தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறாத கல்வி நிலையங்கள் கூட்டமைப்பு ஆகியவை கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
சரியானது அல்ல
இந்த வழக்கின் விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி பிரதீப் சிங் யரூரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், 'கொரோனா பரவல் காலத்தில் குழந்தைகளின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டது. அதை கருத்தில் கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. இது மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் மற்றும் நுண்ணறிவை மதிப்பீடு செய்ய ஏதுவாக அமல்படுத்தப்பட்டது' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிரதீப் சிங் யரூரா கூறுகையில், 'அரசின் இந்த முடிவு எனது கவனத்திற்கும் வந்தது. இந்த முறையால் சில தனியார் பள்ளிகள் 90 சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. குழந்தைகளின் கல்வித்திறன், நுண்ணறிவை மதிப்பிட இந்த திட்டம் சரியானது அல்ல.
மதிப்பிடுவது சாத்தியமா...
மாணவ-மாணவிகள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்துத்தான் அவர்களின் அறிவுத்திறன், தன்னம்பிக்கை, நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றை நீங்கள் மதிப்பிடுவீர்களானால், ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த ஏராளமான வக்கீல்கள் தற்போது வெறும் கையுடன் கோர்ட்டு வளாகத்தில் நிற்பதை நீங்கள் இப்போது கூட பார்க்கலாம். தாங்கள் படித்த காலத்தில் தங்கப்பதக்கம் பெற்ற பல டாக்டர்கள் தற்போது சிகிச்சை அளிக்க ஒரு நோயாளி கூட இல்லாமல் இருக்கிறார்கள். படிக்கும் காலத்தில் தங்கப்பதக்கம் வென்ற பல என்ஜினீயர்கள் கட்டிய அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதற்கெல்லாம் நீங்கள் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 'மாணவ-மாணவிகள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து அவர்களின் அறிவுத்திறன், தன்னம்பிக்கை, நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றை மதிப்பிடுவது சாத்தியமா?. அதனால் மதிப்பெண்களை வைத்து மாணவ-மாணவிகளின் திறனை மதிப்பிட வேண்டாம்' என்று கூறினார். பின்னர் நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார்.