ஆசிரியர்கள் சீருடை அணியும் திட்டம் தொடங்கப்படுகிறதா?


ஆசிரியர்கள் சீருடை அணியும் திட்டம் தொடங்கப்படுகிறதா?
x
தினத்தந்தி 11 July 2023 3:19 AM IST (Updated: 12 July 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் சீருடை அணியும் திட்டம் தொடங்கப்படுவது குறித்து சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பதிலளித்துள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் மஞ்சுநாத் பண்டாரி கேட்ட கேள்விக்கு பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியதாவது:-

தொந்தரவு ஏற்படக்கூடாது

கர்நாடகத்தில் 13 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நியமன பணிகளுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். கல்வி ஆண்டு தொடங்கிவிட்டதால் அந்த ஆசிரியர்கள் விரைவாக நியமனம் செய்யப்படுவார்கள்.

அரசு பள்ளிகளில் 85 சதவீத குழந்தைகளுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வினியோகம் செய்துவிட்டோம். சீருடையுடன் குழந்தைகளுக்கு ஒரு ஜோடி 'ஷூ' மற்றும் 2 ஜோடி காலுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கிடைப்பதில் எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

விதிமுறைகள் வகுக்கப்படும்

பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை அணியும் திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. குழந்தைகளின் கற்றலுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் ஆசிரியர்கள் உடையை அணிய வேண்டும். வரும் நாட்களில் இது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும். 240-க்கும் அதிகமான மாணவர்கள் உள்ள உயர் தொடக்க பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 258 இசை ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 177 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 81 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. 223 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் 152 ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறார்கள். அவற்றில் 71 ஆசிரியர் இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.


Next Story