'பசுவதை தடை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்பதா?'-பசவராஜ் பொம்மை கண்டனம்
பசுவதை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்ற மந்திரி கே.வெங்கடேசின் பேச்சுக்கு பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கண்டிக்கத்தக்கது
கால்நடை துறை மந்திரி கே.வெங்கடேஷ் கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று கூறியதுடன், வயதான எருமை மாடுகளை வெட்டும் போது பசுக்களையும் ஏன் வெட்டக் கூடாது என்று பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு கண்டித்தக்கது. அவரது பேச்சு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது. பசுவுக்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.
பசுவை நாம் கடவுளாக நினைத்து வணங்குகிறோம். அப்படி இருக்கையில் மந்திரி கே.வெங்கடேஷ் யாரை திருப்திபடுத்தும் நோக்கத்தில் இப்படி பேசி இருக்கிறார் என்று தெரியவில்லை. தனக்கு கொடுத்த இலாகாவை காங்கிரஸ் மேலிடம் மாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி பேசி இருக்க வாய்ப்புள்ளது. மகாத்மா காந்தி கூறியபடி கடந்த 1960-ம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
சட்டத்தில் திருத்தம் மட்டுமே...
மந்திரி கே.வெங்கடேசின் பேச்சு காரணமாக மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பசுக்களை இறைச்சிக்காக வெட்டும் கூடங்கள் திறக்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சட்டத்திற்கு எதிராக மாநிலம்முழுவதும் பசுக்களை இறைச்சிக்காக வெட்டும் கூடங்கள் திறக்கப்படலாம். பசுவதை தடுப்பு சட்டத்தில் கர்நாடகத்திற்கு என்று தனியாக சட்டத்தை பா.ஜனதா கொண்டு வரவில்லை.
ஏற்கனவே இருந்த பசுவதை சட்டத்தில் தான் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது. அந்த சட்டத்திற்கு பலம் கொடுத்துள்ளோம். மந்திரியாக இருக்கும் ஒருவர் பேசும் போது, எல்லாவற்றையும் அறிந்து பேச வேண்டும். இந்த விவகாரத்தில் மந்திரி கே.வெங்கடேசுக்கு, முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து சரியானதகவல் செல்ல வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.