மத்திய பிரதேசத்தில் கொடூரம்: மனநலம் பாதித்த நபர் அடித்துக்கொலை


மத்திய பிரதேசத்தில் கொடூரம்: மனநலம் பாதித்த நபர் அடித்துக்கொலை
x

மத்திய பிரதேசத்தில் உனது பெயர் முகம்மதுவா? எனக்கேட்டு மன நலம் பாதித்த நபரை ஒருவர் கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேசம் நீமச் மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவரை, இளைஞர் ஒருவர் 'உன் பெயர் முகமது தானே?' என கேட்டு அடிக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. பதில் பேச தடுமாறும் அந்த முதியவர் அடுத்திக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், இறந்தவர் பெயர் பன்வார்லால் ஜெயின். ரத்லம் மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த மே 15-ஆம் தேதி ஒரு மத நிகழ்ச்சிக்காக ராஜஸ்தான் சென்றபோது தொலைந்துவிட்டதாக புகார் வந்தது. இதையடுத்து அவர் புகைப்படத்தை வெளியிட்டு தேடி வந்தோம். இந்நிலையில் நேற்று அவரது உடல் சாலையோரம் கிடந்ததாக கிடைத்த தகவலையடுத்து சென்று விசாரணை நடத்தினோம்.

இதையடுத்து அவர் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் ஜெயின் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். அவரை ஒரு இளைஞர் சராமரியாக தாக்கியபடியே, 'உன் பெயர் என்ன? முகமது தானே' என விசாரணை நடத்துகிறார். முதியவர் பதில் எதுவும் கூறாமல் இருக்கவே, முதியவரின் கன்னத்தில் அறைந்து, 'உன் பெயரை ஒழுங்காக சொல், உன் ஆதார் அட்டையை காட்டு' எனவும் கேட்கின்றனர்.

நடுங்கியபடி இருக்கும் முதியவர் பணம் தருவதாக கூறுகிறார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த தாக்குதல் நடத்துபவர் முதியவரின் காது மற்றும் மண்டையில் சராமரியாக தாக்குகிறார். அவர் பணம் கொடுக்க முயற்சி செய்யும் போது பலமாக தாக்கப்படுகிறார்.இந்த வீடியோவை ஜெயினின் குடும்பத்தினர் எங்களிடம் கொடுத்தனர்.இவ்வாறு போலீசார் கூறுகின்றனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் பெயர் தினேஷ் குஷ்வாஹா என தெரியவந்துள்ளது. அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது.


Next Story