காதலனை கரம்பிடிக்கவே பாகிஸ்தான் இளம்பெண் இந்தியா வந்தது உறுதி


காதலனை கரம்பிடிக்கவே பாகிஸ்தான் இளம்பெண் இந்தியா வந்தது உறுதி
x

சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருந்த பாகிஸ்தான் நாட்டு இளம்பெண் தனது காதலனை கரம்பிடிக்கவே இந்தியா வந்ததும், வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பெங்களூரு:-

பாகிஸ்தான் இளம்பெண்

பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் நாட்டுக்கு தொடர்பு கொண்டு அடிக்கடி ஒரு பெண் பேசி வந்துள்ளார். இதை உளவுத்துறையினர் கண்டறிந்து கண்காணித்து வந்தனர். பின்னர் உளவுத்துறையினர் பெங்களூரு பெல்லந்தூர் போலீசாருடன் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது ராவா யாதவ் என்றும், தான் தன்னுடைய கணவர் முலாயசிங் யாதவுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவரிடமிருந்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்று சரிபார்த்தனர். அப்போது அவர் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருந்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவரது உண்மையான பெயர் ஐக்ரா ஜீவானி(வயது 26) என்பதும் தெரியவந்தது.

இந்து முறைப்படி திருமணம்

அதாவது ஐக்ரா ஜீவானிக்கும், அவரது கணவர் முலாயம் சிங் யாதவுக்கும் ஒரு விளையாட்டு செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் பெங்களூருவில் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். காதல் மலர்ந்த நிலையில் ஐக்ரா, தனது பெற்றோர் சம்மதத்துடன் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் துபாய் சென்று, பின்னர் துபாயில் இருந்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு வந்துள்ளார்.

காத்மாண்டுவில் வைத்து ஐக்ராவை, முலாயம்சிங் யாதவ் சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் அங்கு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து அவர்கள் காத்மாண்டுவில் இருந்து பீகாருக்கு சென்றனர்.

வீட்டை வாடகைக்கு எடுத்து...

பீகாரில் சில நாட்கள் தங்கி இருந்த அவர்கள் அங்கிருந்து பெங்களூருவுக்கு வந்து பெல்லந்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துள்ளனர். அவர்களுக்கு கோவிந்த ரெட்டி என்பவர் வாடகைக்கு வீட்டை வழங்கி உள்ளார். அங்கு கடந்த 7 வருடங்களாக அவர்கள் வசித்து வந்துள்ளனர். மேலும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அதன்மூலம், ஐக்ராவுக்கு அனைத்து ஆவணங்களையும் முலாயம்சிங் யாதவ் அரசிடம் இருந்து பெற்றிருந்தார். இந்த நிலையில்தான் ஐக்ரா, பாகிஸ்தானில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொண்டு பேசி இருந்தார்.

இதையடுத்து போலீசார் ஐக்ரா, அவரது கணவர் முலாயம் சிங் யாதவ், அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு வழங்கிய கோவிந்த ரெட்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உளவுத்துறையிடம் அறிக்கை தாக்கல்

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஐக்ரா, தனது காதலனை கரம்பிடிக்கவே இந்தியாவுக்கு வந்ததும், அவர் வேறு எந்தவித உள்நோக்கத்துடனோ, உளவாளி வேலை பார்க்கவோ இந்தியாவுக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது. இதே வாக்குமூலத்தை ஐக்ராவும் கூறியிருந்தார். இதுபற்றி முழுமையாக விசாரித்த போலீசார், பின்னர் அதை உறுதி செய்து கொண்டனர். அதையடுத்து போலீசார் தங்கள் அறிக்கையை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு மற்றும் மாநில நுண்ணறிவு பிரிவு, உளவுத்துறை ஆகியோரிடம் தாக்கல் செய்தனர்.

தற்போது ஐக்ரா போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த அவரது கணவர் முலாயம்சிங் யாதவ், வீட்டு உரிமையாளர் கோவிந்த கவுடா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story