மத்திய அரசு பணி தேர்வில் கன்னட மொழி புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது- முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி


மத்திய அரசு பணி தேர்வில் கன்னட மொழி புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது-  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
x

மத்திய அரசு பணிகளில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்று குமாரசாமி எச்சரித்துள்ளார்.

பெங்களூரு: மத்திய அரசு பணிகளில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்று குமாரசாமி எச்சரித்துள்ளார்.

கன்னட அமைப்புகள் எதிர்ப்பு

மத்திய அரசில் காலியாக இருக்கும் பணிகளுக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு பணிகளுக்கு நடைபெறும் எழுத்து தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு கன்னட ரக்‌ஷனே வேதிகே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கன்னட மொழியை புறக்கணித்திருக்கும் மத்திய அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

வீதியில் இறங்கி போராட்டம்


மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தான் எழுத வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பணிகளுக்கான தேர்வில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனதாதளம்(எஸ்) கட்சி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும். இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

அத்துடன் அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு எழுத மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜ்யோத்சவாவையொட்டி கன்னட பாட்டுகள் பாடப்பட்டு வருகிறது. மத்திய பா.ஜனதா அரசும், மாநில பா.ஜனதா அரசும் இரட்டை வேடம் போடுகிறார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கை பற்றி கர்நாடக அரசு ஏன் கேள்வி எழுபபுவதில்லை. கன்னடர்களின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.



Next Story