மகாத்மா காந்தியின் கொள்கைப்படி நாம் நடந்து கொள்வது முக்கியம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
மகாத்மா காந்தியின் கொள்கைப்படி நாம் நடந்து கொள்வது முக்கியம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
வாழ்க்கை வரலாறு
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மகாத்மா காந்தி கூறியது போல் அவரது வாழ்க்கையே ஒரு வரலாறு, கோட்பாடு. அவரது வாழ்க்கை வரலாற்றை படித்து பார்த்து அதன்படி நாம் நடந்து கொள்வது முக்கியம். அவரது வாழ்க்கையின் ஆதாரம் தார்மிகம் மற்றும் உண்மை ஆகும். இந்த இரண்டு விஷயங்களையும் அவர் தீவிரமாக பின்பற்றினார். அவர் எப்போதும் தன்னை தானே சுயபரிசோதனைக்கு உட்படுத்தி சுத்தம் செய்து கொண்டார். இது அவரது வாழ்நாள் முழுவதும் நடந்தது.
சொத்துக்கள் தியாகம்
அஹிம்சையில் முழு நம்பிக்கை வைத்து, அதில் பெரிய பலம் உள்ளது என்பதை நிரூபித்தார். அத்தகைய போராட்டத்தின் மூலம் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார். சுதந்திர போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் தங்களின் சொத்துக்களை தியாகம் செய்தனர். உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அதன் மூலம் சுதந்திர போராட்டத்திற்கு சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சந்திரசேகர ஆசாத், லோக்மான்ய திலக் போன்றோர் வழிகாட்டினார்.
இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து போராடி நமக்கு காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். அவரது கொள்கைகள் பொது வாழ்க்கையில் பயன்படுத்தப்பட வேண்டும். நமது நாட்டிற்கு பெரிய வரலாறு உள்ளது. இந்த நாளில் காந்திக்கு எனது உணர்வு பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்.
உழைக்கும் வர்க்கம்
கர்நாடக பட்ஜெட் வருகிற 17-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதில் அனைத்து பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினருக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளேன். பொருளாதார ரீதியாக அவர்களை முன்னிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெற வேண்டும். மந்திரிசபை விஸ்தரிப்பு விஷயத்தில் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.