மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி சேவைகளை செய்து கொடுப்பது கட்டாயம்


மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி சேவைகளை செய்து கொடுப்பது கட்டாயம்
x

கிராம ஒன் மையங்களில் மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி சேவைகளை செய்து கொடுப்பது கட்டாயம் என்று கிராம ஒன் மைய அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் திட்ட இயக்குனர் வரப்பிரசாத் ரெட்டி கூறினார்.

மண்டியா:-

ஆலோசனை கூட்டம்

மண்டியா (மாவட்டம்) டவுனில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அமைந்திருக்கும் காவேரி அரங்கில் நேற்று முன்தினம் கிராம ஒன் திட்ட இயக்குனர் வரப்பிரசாத் ரெட்டி தலைமையில், கிராம ஒன் மைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிகாரி வரப்பிரசாத் ரெட்டி பேசும்போது கூறியதாவது:-

கிராம ஒன் திட்டம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள், அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதை தவிர்க்கவே இந்த கிராம ஒன் மையங்கள் அமைக்கப்பட்டது. அதனால் கிராம ஒன் மையங்களில் சேவைகள் அனைத்தும் திருப்திகரமாக இருக்க வேண்டும்.

தேர்தல் பணி

இன்னும் பல சேவைகள் கிராம ஒன் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. தேர்தல் நேரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிடுவார்கள். அந்த சமயங்களில் மக்கள் கிராம ஒன் மையங்களுக்கு அதிக அளவில் வருவார்கள். குறிப்பாக வருவாய் துறை மூலம் பெற வேண்டிய சான்றிதழ்கள் உள்பட ஏராளமான சான்றிதழ்கள் கிராம ஒன் மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதனால் கிராம ஒன் மைய ஊழியர்கள் முகம் சுழிக்காமல் மக்களுக்கு சேவைகளை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கான சேவைகள், துணை பத்திர பதிவாளர் சேவைகள், மாணவ-மாணவிகளுக்கான சேவைகள் மற்றும் வருவாய் துறை சம்பந்தப்பட்ட சேவைகளை துரித கதியில் கால தாமதம் இன்றி செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம்.

ஆயுஸ்மான் பாரத் சுகாதார அட்டை

மேலும் ஆயுஸ்மான் பாரத் சுகாதார அட்டை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக அதை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story