பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடா சிலை நவம்பர் 10-ந் தேதி திறப்பு
பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பேகவுடா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
108 அடி கெம்பேகவுடா சிலை
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகாவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தையொட்டி 108 அடி உயரத்தில் கெம்பேகவுடாவுக்கு சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர அங்கே பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கெம்பேகவுடா சிலையை வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி திறந்து வைக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, விமான நிலையத்தையொட்டி கெம்பேகவுடா சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு கெம்பேகவுடா சிலையை சுற்றி 20 ஏக்கரில் தீம்பார்க் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, சிலை அமைப்பது, தீம் பார்க் அமைக்கும் பணிகளும் கூடிய விரைவில் நிறைவு பெற உள்ளது.
பிரதமர் திறந்து வைக்கிறார்?
நவம்பர் 10-ந் தேதி கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், 108 அடி உயர கெம்பேகவுடா சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடியிடம் கர்நாடகத்தில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படி பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதனால் மைசூருவில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
பின்னர் பிரதமர் மோடி வரவில்லை என்று அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நவம்பர் 10-ந் தேதி கெம்பேகவுடா சிலையை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுக்க அரசு தீர்மானித்திருப்பதாகவும், இதனால் பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்து கெம்பேகவுடா சிலையை திறந்து வைக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.