நஞ்சன்கூடு தொகுதி மக்கள் தான் எனக்கு தாய்-தந்தை தர்ஷன் துருவநாராயண் உருக்கம்
நஞ்சன்கூடு தொகுதி மக்கள்தான் எனக்கு தாய் - தந்தை என தர்ஷன் துருவநாராயண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மைசூரு-
நஞ்சன்கூடு தொகுதி மக்கள்தான் எனக்கு தாய் - தந்தை என தர்ஷன் துருவநாராயண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பா.ஜனதா 66 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரம், ரோடு ஷோ பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். ஆனால் அது பலன் அளிக்காமல் போய்விட்டது.
இதில் மைசூரு மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரசும் 2 தொகுதிகளிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியும், பா.ஜனதா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தர்ஷன் துருவநாராயண் 1,09,125 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஹர்ஷவர்தனை தோற்கடித்தார்.
தொகுதி மக்களுக்கு நன்றி
இந்தநிலையில் நேற்று நஞ்சன்கூட்டில் நிருபர்களிடம் தர்ஷன் துருவநாராயண் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாது:-
எனது தந்தை முன்னாள் எம்.பி., ஆர். துருவ நாராயண், தாய் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டனர். இந்தநிலையிலும் காங்கிரஸ் கட்சி நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி எனக்கு (தர்ஷன் துருவநாராயண்) வாய்ப்பளித்தது.
இந்தநிலையில் தொகுதி மக்களை சந்தித்து வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் என்னை வெற்றி பெற செய்து உள்ளனர். தந்தை-தாய் இழந்த கவலையில் உள்ள எனக்கு நஞ்சன்கூடு தொகுதி மக்கள்தான் தாய்-தந்தை. மேலும் சட்டசபைக்கு என்னை அனுப்பிய நஞ்சன்கூடு தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.