சாதி, பண பலத்தால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என நிரூபிக்க வேண்டும்


சாதி, பண பலத்தால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என நிரூபிக்க வேண்டும்
x

சாதி, பண பலத்தால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு சபாநாயகர் காகேரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவமொக்கா:

தேர்தல் சீர்திருத்த கலந்துரையாடல்

சிவமொக்காவில் மாவட்ட நிர்வாகம், தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கர்நாடக சட்டசபை சபாநாயகர், விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு வாக்காளரும், தங்களது ஓட்டு விற்பனைக்கு இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். சாதி, பணம் பலத்தால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை வாக்காளர்கள் நிரூபிக்க வேண்டும்.

இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வோடும், உறுதியோடும் ஜனநாயகத்தின் காவலர்களாக செயல்பட வேண்டும். இலக்கியம், நீதித்துறைகளில் ஓய்வு பெற்றவர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுநல மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

வணிக நிறுவனமாக...

தேர்தல் தொடர்பான குறைபாடுகளுக்கு மறைமுக காரணம் கல்வி முறைதான். தற்போதைய கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனமாக மாறி வருகிறது.

தேச பக்திக்கு 2-ம் நிலை என்ற மேற்கத்திய கலாசாரத்தை நமது நாட்டில் சிலர் விதைக்க முயற்சி செய்கிறார்கள். கல்வி, தேர்தலில் முன்னேற்றம் ஏற்பட்டால் நாடு வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இ்ந்த நிகழ்ச்சியில் சிவமொக்கா கலெக்டர் செல்வக்குமார், மாநகராட்சி மேயர் சிவக்குமார், துணை மேயர் சங்கர் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story