சிவசேனாவை உடைத்தது யார்? "சரத் பவாரை" கடுமையாக தாக்கிய மூத்த தலைவர் ராமதாஸ் கதம்


சிவசேனாவை உடைத்தது யார்? சரத் பவாரை கடுமையாக தாக்கிய மூத்த தலைவர் ராமதாஸ் கதம்
x

மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியுமான ராம்தாஸ் கதம் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார்.

மும்பை,

சிவசேனா கட்சியை உடைத்தது சரத் பவார் தான் என்று ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ ராமதாஸ் கதம் தெரிவித்தார்.

மராட்டியத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சிவசேனாவுக்கும், ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. சிவசேனாவில் இருந்து தலைவர்களின் வெளியேற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதற்கிடையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அதன் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ராம்தாஸ் கதம் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார்.

ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்த பின் எம்.எல்.ஏ ராமதாஸ் கதம் கூறியதாவது:-

"சிவசேனா கட்சியை உடைத்தது சரத் பவார். பாலாசாஹேப் இருந்ததிலிருந்து, சரத் பவார் சிவசேனா கட்சியை முடிவுக்கு கொண்டுவர முயன்றார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கினார். கொரோனா சமயத்தில் உத்தவ் வெளியே செல்லவில்லை, பின்னர் 6 மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

பவாரால் சிவசேனா முறைப்படி பலவீனப்படுத்தப்பட்டது. சில எம்.எல்.ஏ.க்கள் இது குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால் பவாரை விட்டு பிரிந்து செல்ல தாக்கரே தயாராக இல்லை.

மேலும், சிவசேனா தலைவரின் மகன் தாக்கரே, என்சிபி மற்றும் காங்கிரஸ் மந்திரிகளுடன் அமர்ந்திருப்பது எங்கள் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஏக்நாத் ஷிண்டே இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால், அடுத்த தேர்தலில் சிவசேனாவுக்கு 10 எம்.எல்.ஏக்கள் கூட கிடைத்திருக்க மாட்டார்கள்.

ஏக்நாத்துடன் சென்ற எம்.எல்.ஏக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் 52 ஆண்டுகள் கட்சியில் பணியாற்றி பின்னர் வெளியேற்றப்பட்டேன். இன்று முதல் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைகிறேன்" என்றார்.

இதை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்(என்சிபி)யின் தலைமை செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே மறுத்தார்.

சிவசேனாவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கூறிய அவர், கதமின் கருத்துக்களை நிராகரித்தார், வேண்டுமென்றே பவாரை குற்றம்சாட்டுகின்றனர் என்றார். அதிருப்தி தலைவர்கள் பவாரை குறிவைத்து, தங்கள் மீதான குற்றச்சாட்டிலிருந்து கவனத்தை திசை திருப்ப முயல்கின்றனர் என்றார்.


Next Story