இது புது வகை ஜல்லிக்கட்டு... காளை சவாரி செய்த போதை வாலிபர்; வைரலான வீடியோ
உத்தரகாண்டில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் காளை மீது சவாரி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
டேராடூன்,
உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் தபோவனம் பகுதியில் வெளியான வீடியோ ஒன்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதில், வாலிபர் ஒருவர் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி சாலை வழியே இரவில் பயணம் செய்கிறார்.
இந்த வீடியோவை வைரலாக்குவதற்காக அந்த நபர் இதனை பதிவு செய்து உள்ளார். ஆனால், அது அவரை சட்ட நடவடிக்கையில் கொண்டு சென்று விட்டு விட்டது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், வாலிபர் ஒருவர் மதுபோதையில் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி செல்லும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதனால், போலீசார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரிஷிகேஷின் தபோவன பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
அந்த வாலிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வருங்காலத்தில் விலங்குகளிடம் இதுபோன்று தவறாக நடக்க கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டது என போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதும், பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். எனினும், சிலர் இதனை ஜல்லிக்கட்டு போட்டியுடன் ஒப்பிட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அந்த வாலிபர் எதுவும் செய்யவில்லை என தெரிவித்து உள்ளனர்.