திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியால் செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலம் ஜெய்ராம் ரமேஷ்


திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியால் செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலம் ஜெய்ராம் ரமேஷ்
x
தினத்தந்தி 10 Jun 2023 2:45 AM IST (Updated: 10 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியால், செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார்.

இந்தப் புதிய கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிற செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

இந்த செங்கோல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய விடுதலையின்போது, கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம், " இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம், அதை எப்படி அடையாளப்படுத்துவது?" என்று கேட்டபோது, அவர் மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர், "தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது, அதை அடையாளப்படுத்துவதற்கு செங்கோலை புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம், இப்போதும் அதன்படியே ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தலாம்" என்று கூறினாராம். அதன்படியே சென்னையில் செங்கோல் தயாராகி, மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்து வாங்கி, பின்னர் அன்று ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என பா.ஜ.க. தரப்பில் அதன் மூத்த தலைவர் அமித் மாளவியா மே 26-ந் தேதி தெரிவித்தார்.

ஆனால் அப்போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்துவதற்காக செங்கோல் வழங்கப்பட்டதற்கு ஆவணப்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியை சுட்டிக்காட்டி, செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலமாகி விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் நேற்று பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆக, பா.ஜ.க.வின் போலித்தகவல் மூட்டை வெளிப்படுத்தப்பட்டு விட்டது. அதுவும், திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளால், வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் பேட்டன் இல்லை. ராஜாஜி கிடையாது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஆட்சி மாற்றத்துக்கு இது (செங்கோல்) அங்கம் வகிக்கவில்லை. ஆனால், அந்த கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.

இன்றைய மன்னர் மற்றும் அவரது துதிபாடிகளின் பொய்களுக்கு மாற்றாக உண்மைகள் உள்ளன.

இவவாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story