108 தேங்காய்களை உடைத்து ஜனதா தளம்(எஸ்) வேட்பாளருக்கு பாலாபிஷேகம்
ஹலகூர் அருகே வாக்குசேகரிக்க சென்ற ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் அன்னதாணிக்கு தொண்டர்கள் 108 தேங்காய்களை உடைத்து, பாலாபிஷேகம் செய்து பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நடந்துள்ளது.
ஹலகூர்:-
ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி 20-ந் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மண்டியா மாவட்டம் மலவள்ளி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அன்னதாணி போட்டியிடுகிறார்.
நேற்று அவர் ஹலகூர் அருகே உள்ள மலவள்ளி தொகுதிக்கு உட்பட்ட பாலேஹொன்னி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் அங்குள்ள பசவேஸ்வரா கோவிலில் 101 தேங்காய்களை உடைத்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார்.
கிராம மக்கள் வியப்பு
பின்னர் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது அவருக்கு கிராம மக்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்களும் சேர்ந்து பாலாபிஷேகம் செய்தனர். மேலும் அவருக்கு 108 தேங்காய்களை சுற்றி உடைத்து பூரண கும்ப மரியாதை வழங்கினர். இதைப்பார்த்த கிராம மக்கள் பலரும் வியந்தனர். பின்னர் அவர்கள் இதை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
தற்போது அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் வாக்காளர்கள் மத்தியில் பேசிய அன்னதாணி, தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.