45 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த ஜனதாதளம்(எஸ்)
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி 45 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.
பெங்களூரு:-
45 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 120 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று கூறிய அந்த கட்சியால் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி 207 தொகுதிகளில் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தது. அதில், 45-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாமல் மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர்.
281 வாக்குகள்
இவற்றில் கார்கலாவில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் ஸ்ரீகாந்த் பூஜாரி வெறும் 281 வாக்குகள் மட்டுமே வாங்கி இருந்தார். அந்த கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் மிகவும் குறைந்த ஓட்டுகள் பெற்றவர் அவர் தான்.
அதே நேரத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி கடந்த 2004-ம் ஆண்டு 54 தொகுதிகளிலும், 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 28 தொகுதிகளிலும், 2013-ம் ஆண்டு 40 தொகுதிகளிலும், கடந்த 2018-ம் ஆண்டு 37 தொகுதிகளிலும், தற்போது வெறும் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக குமாரசாமி 1½ ஆண்டு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.