ஜனதாதளம்(எஸ்) கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் தான் சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியும்
வரும் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் தான் சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியும் என்று குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரு:
குமாரசாமி பேட்டி
மைசூருவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி செயலாளர்கள், தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், அக்கட்சி தலைவருமான குமாரசாமி கலந்துகொண்டார். முதல்நாள் கூட்டத்தை முடித்துக்கொண்டு மைசூருவில் தங்கிய குமாரசாமி, குடும்பத்துடன் நேற்று காலை சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கோவிலுக்கு வெளியே வந்து குமாரசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பஞ்சரத்ன திட்டம்
வரும் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால்தான் சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியும்.
மேலும் மக்களுக்கான எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்,. ஆனால் கடந்தமுறை போல் கூட்டணி ஆட்சி வந்தால் சுதந்திரமாக செயல்பட முடியாது, எந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் பஞ்சரத்ன திட்டத்தை அமலுக்கு கொண்டு வரப்படும். இல்லையென்றால் எனது ஆட்சியை கலைக்கிறேன். இதை நான் சும்மா சொல்லவில்லை. சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதானத்தில் நின்று பேசுகிறேன்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆட்சிக் காலத்தில் முறைகேடுகள்
நடந்து இருந்தால், அதற்கு சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால் அதனை காண்பித்து பா.ஜனதா அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதைவிடுத்து முறைகேடு நடந்ததாக பேசினால் மட்டும் போதாது. சித்தாராமையாவே, என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அப்படி இருக்கையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுக்காதது ஏன்.
பா.ஜனதா 65 இடங்களில்...
இந்த விஷயத்தில் பா.ஜனதாவினர், காங்கிரசார் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு மட்டும் வைக்கின்றனர். மேலும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று 2 கட்சிகளும் புரிந்து வைத்துள்ளன. இதனால் கூட்டணிக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியை எதிர்பார்த்து தங்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் வைக்காமல் உள்ளனர்.
இந்த முறை தேர்தலில் பா.ஜனதா 60 முதல் 65 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெறும். அந்த கட்சி கூட்டணிக்கு நம் உதவியை நாடும். ஜி.டி.தேவேகவுடா வீட்டிற்கு நானும், எனது தந்தை எச்.டி.தேவேகவுடாவும் சென்று பேசி அவரிடம் கட்சியை விட்டு விலக வேண்டாம் என்று ெதரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.