ஜனதாதளம்(எஸ்) கட்சி 20 இடங்களில் கூட வெற்றி பெறாது
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி 20 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மைசூரு:-
20 இடங்களில் கூட...
மைசூருவில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான், நேற்று மைசூருவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனதாதளம்(எஸ்) கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவதாக குமாரசாமி அறிவித்துள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது. இது குமாரசாமிக்கே தெரியும். இந்த தைரியத்தில் தான் அவர், முஸ்லிமை முதல்-மந்திரி ஆக்குவோம் என்று கூறுகிறார். சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி 20 இடங்களில் கூட வெற்றி பெறாது. முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக குமாரசாமி இதுபோன்று பேசி வருகிறார்.
ஏமாற வேண்டாம்
ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவேன் என்று குமாரசாமியால் அறிவிக்க முடியமா?. 123 இடங்களில் வெற்றி பெறுவதாக குமாரசாமி கனவு காண்கிறார். அந்த கனவு பலிக்காது. ஜனதாதளம்(எஸ்) குடும்ப கட்சி. அந்த கட்சியில் சாமானிய தொண்டனுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களுக்கே பதவி கிடைக்கும். மக்களை ஏமாற்றுவதற்காக குமாரசாமி நாடகமாடுகிறார்.
ஒருவேளை ஜனதா
தளம்(எஸ்) கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தால், முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி விட்டு கொடுக்க மாட்டார். அது அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் மக்கள் அவரை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.