அரிசிகெரே பா.ஜனதா பிரமுகர் என்.ஆர்.சந்தோசை சிறை பிடித்த பொதுமக்கள்
குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாக அரிசிகெரே தொகுதி பா.ஜனதா பிரமுகர் என்.ஆர்.சந்தோசை பொதுமக்கள் சிறை பிடித்தனர். மேலும் அவரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன்:-
என்.ஆர்.சந்தோஷ் சிறைபிடிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் ஆதரவாளரும் அவரது அரசியல் முன்னாள் செயலாரு மான என்.ஆர்.சந்தோஷ் ேபாட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. இருப்பினும் அவர் அரிசிகெரே தொகுதியில் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி நேற்று முன்தினம் அரிசிகெரே தாலுகாவில் உள்ள பெல்கும்பா கிராமத்தை அடுத்த கொல்லரஹட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கேட்ட அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி, என்.ஆர்.சந்தோஷை சிறைபிடித்தனர்.
மன்னிப்பு கேட்கவேண்டும்
அப்போது அவர்கள், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வாக்கு கேட்கிறீர்கள். ஆனால் தொகுதி மக்களுக்கு எந்த நல்லது செய்யவில்லை. இதில் உழைக்கும் வர்க்கமாக உள்ள எங்கள் சமுதாயத்தை பற்றி இழிவாக பேசுகிறீர்கள். உங்கள் பணத்தில் நாங்கள் வாழவில்லை. நாங்கள் உழைக்கிறோம்.
அரசியல் பிரசாரத்திற்கு வந்தால் அதை மட்டுமே பேசவேண்டும். குறிப்பட்ட சமுதாயத்தை குறி வைத்து இழிவுப்படுத்தி பேச கூடாது. பேசிய வார்த்தைக்கு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து செல்ல முடியாது என்று கூறினர்.
போலீசார் மீட்டனர்
இதை கேட்ட என்.ஆர்.சந்தோஷ் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கும், என்.ஆர்.சந்தோஷ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது கிராம மக்கள் என்.ஆர்.சந்தோசை தாக்க முயன்றதாக தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து அரிசிகெரே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தாக்குதல் நடத்த முயன்றவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து என்.ஆர். சந்தோசை போலீசார், அவரை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.