நகைக்கடை ஊழியரை கொன்று தங்கம் கொள்ளை
நகைக்கடை ஊழியரை கொன்று தங்கம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு:
மங்களூருவை சேர்ந்தவர் ராகவா ஆச்சார்யா (வயது 55). இவர் அங்குள்ள தங்க நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் 2 பேர் நகைக்கடைக்கு வந்துள்ளனர். அப்போது ராகவா மட்டும் கடையில் இருந்துள்ளார். அவர்கள் மர்மநபர்கள் 2 பேருக்கும் தங்க நகைகளை காண்பித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். பின்னர், மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். மர்மநபர்கள் கத்தியால் குத்தியதில் ராகவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், ராகவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 2 மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அவர்கள் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் மங்களூரு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நகைக்கடைக்குள் புகுந்து ஊழியரை கொன்று தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.