எல்லாப்பூர் அருகே காளி ஆற்றின் தொங்கு பாலத்தில் காரை ஓட்டிய வாலிபர் கைது
எல்லாப்பூர் அருகே காளி ஆற்றின் தொங்கு பாலத்தில் காரை ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கார்வார்;
உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர், ஜோய்டா தாலுகாக்களின் எல்லையில் உள்ள சிவபுரா கிராமத்தில் காளி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் உள்ளது. அந்த தொங்கு பாலத்தில் நடந்து செல்லவும், இருச்சக்கர வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொங்கு பாலத்தில் சிலர் காரில் சென்றுள்ளனர். தொங்கு பாலத்தில் கார் ஓட்டி சென்றதை சிலர் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அவை வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுதொடர்பாக ஜோய்டா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காரின் பதிவெண்ணை வைத்து விதிமுறையை மீறி தொங்கு பாலத்தில் காரை ஓட்டி சென்றவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் ஜோய்டா தாலுகா உலவியை சேர்ந்த முஜாகித் ஆஜாத் சையத்(வயது 25) என்பது தெரியவந்தது. அவர், தொங்கு பாலத்தில் காரை ஓட்டி சென்றதை ஒப்புக்கொண்டார்.