உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாட்டம்


உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாட்டம்
x

மாநகராட்சியின் நிபந்தனைகளுடன் உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் கனகதாசர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை கடந்த வந்த ஈத்கா மைதானத்தில் சமீபத்தில் தார்வார் ஐகோர்ட்டு உத்தரவின்படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஈத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி, கனகதாசர் ஜெயந்தி கொண்டாட அனுமதி அளிக்கும்படி மாநகராட்சிக்கு மாறி, மாறி கோரிக்கைகள் வந்தன. மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாநகராட்சி அனுமதியுடன் உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், கனகதாசர் ஜெயந்தி கொண்டாட ஈத்கா மைதானத்தில் ஏற்பாடு செய்ய தொண்டர்களுடன் சென்றார். போலீசார், அவரை கைது செய்து சில மணிநேரம் கழித்து விடுவித்தனர்.

இதையடுத்து மாநகராட்சி சில நிபந்தனைகளுடன் கனகதாசர் ஜெயந்தி கொண்டாட அனுமதி அளித்தது. அதன்படி நேற்று காலை உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையடுத்து சில மணிநேரத்தில் அங்கு வைத்த கனகதாசர் புகைப்படம் எடுக்கப்பட்டது. முன்னதாக திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடியதால் தீட்டுபட்டதாக கூறி ஈத்கா மைதானத்தை மாட்டு கோமியத்தை தெளித்து ஸ்ரீராமசேனை அமைப்பினர் சுத்தப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


Next Story