கன்னட ராஜ்யோத்சவா விழா கோலாகலம்
ஆனேக்கல்லில் கன்னட ராஜ்யோத்சவா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆனேக்கல்:-
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் நாடஹப்பகலு ஆச்சரணா சமிதி சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. இதில் கன்னட அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கன்னடத்தாய் புவனேஸ்வரியின் ரத ஊர்வலமும் நடந்தது. ஊர்வலத்தில் ஏராளமான கலைஞர்கள் வேடமிட்டு ஆடிப்பாடி வந்தனர். அவர்கள் கர்நாடகத்தின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் நடனமாடினர். இந்த விழாவில் சிவண்ணா எம்.எல்.ஏ. பேசும்போது, 'கர்நாடகம்-தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆனேக்கல்லில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பேசும் மக்களும் வசித்து வருகிறார்கள்.
அவர்களும் விரைவில் கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். ஆனேக்கல் தாலுகாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 70 மாணவ-மாணவிகள் கன்னட பாடத்தில் 125-க்கு 125 என முழுமதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கன்னடம் மீது அவர்களுக்கு உள்ள பற்று இதன் மூலம் வெளிப்படுகிறது. கன்னட மொழி அனைத்து வீடுகளிலும் பேசப்பட வேண்டும்' என்று கூறினார். இந்த விழாவில் புரசபை தலைவர் பத்மநாபா, துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.