கன்னடர்கள் ஒன்றிணைந்து நாட்டை கட்டமைக்க வேண்டும்
கன்னடர்கள் ஒன்றிணைந்து உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நாட்டை கட்டமைக்க வேண்டும் என்று மந்திரி கோபாலய்யா கூறினார்.
ஹாசன்:-
மந்திரி கோபாலய்யா
கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலம் உதயமான தினமான நவம்பர் 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன்னட ராஜ்யோத்சவா விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதுபோல் ஹாசன் மாவட்டத்திலும் கன்னட ராஜ்யோத்சவா விழா கோலாகலமாக நடந்தது. ஹாசன் டவுனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த கன்னட ராஜ்யோத்சவா விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா கலந்துகொண்டு கன்னட தாய் புவனேஸ்வரிக்கு பூஜைகள் செய்தார். பின்னர் அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ராஜ்யோத்சவா விருது
பின்னர் அவர் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ராஜ்யோத்சவா விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-
கன்னடம் என்பது ஒரு மொழி மட்டும் கிடையாது. அது பந்தம். நாம் எல்லாம் கன்னடர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். நாமெல்லாம் ஒன்று சேர்ந்து உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நம் நாட்டை கட்டமைப்போம். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, எஸ்.எல்.பைரப்பா, எஸ்.கே.கரீம்கான், கொரூர் ராமசாமி அய்யங்கார், ராஜாராயர், சாரத அபிரசாத், பாரா ஒலிம்பிக் சாமியன் கிரீஷ் இப்படி பல்வேறு தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பிறந்த மண் ஹாசன்.
அரசு நடவடிக்கை
இந்த வருடமும் மாவட்டத்தில் மழை நன்றாக பெய்து விளைச்சல் அதிகமாக இருக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கட்டிடங்கள் கட்டுவதுபோல் நாம் ஏரிகளையும் உருவாக்க வேண்டும். ஏனெனில் கட்டிடங்கள் நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல் நீர் ஆதாரங்களும் முக்கியம். கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டத்தில் 11 பேர் மழையால் உயிரிழந்து இருப்பதாகவும், 3 ஆயிரத்து 262 வீடுகள் இடிந்தும், பாதியளவு சேதம் அடைந்தும் இருப்பதாகவும் எனக்கு தகவல்கள் வந்துள்ளது.
தொடர் கனமழையால் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகி இருப்பதாகவும், அதன்மூலம் ரூ.102.94 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.