ராகுல் காந்தி எம்.பி.பதவி பறிப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்று வர்ணித்துள்ளனர்.
பெங்களூரு:
எதிர்க்கட்சிகள் கண்டனம்
பிரதமா் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியை நேற்று மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் இதை கண்டித்துள்ளனர். ஜனநாயகத்தில் இன்று(நேற்று) கருப்பு நாள் என்று அவர்கள் வர்ணித்துள்ளனர். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், 'நீங்கள் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்திருக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத்தில் இருக்கும் அவரை நீக்க முடியாது. பா.ஜனதாவின் ஜனநாயக விரோத போக்கை கண்டிக்கிறேன். இன்று (நேற்று) ஜனநாயகத்தில் கருப்பு நாள்' என்றார்.
கருப்பு நாள்
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், 'பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று(நேற்று) கருப்பு நாள் ஆகும். இந்த நடவடிக்கையை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம். நாட்டில் இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது' என்றார்.