மெட்ரோ நிலையங்களில் விளம்பரங்கள் செய்ய கர்நாடக அரசு அனுமதி
வருவாயை பெருக்கும் நோக்கில் மெட்ரோ நிலையங்களில் விளம்பரங்கள் செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்தை குறைக்கவும், குறித்த நேரத்தில் வேண்டிய இடங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்வதற்கும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மெட்ரோ நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிக்கெட் வருவாய் தவிர மெட்ரோ நிலையங்களில் விளம்பரங்கள் செய்து வருவாய் ஈட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக கர்நாடக அரசிடம் ஒப்புதலுக்கு மெட்ரோ நிர்வாகம் விண்ணப்பித்து இருந்தது.
இந்த நிலையில் மெட்ரோ நிலையங்களில் விளம்பரம் செய்து வருவாய் ஈட்டும் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், மெட்ரோ ரெயில்களில் இழப்பை ஈடுகட்டும் நோக்கில், விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் கிடைக்கும் என்றார்.