விமான தளவாடங்கள் தயாரிப்பில் கர்நாடகம் வளர்ச்சி
விமான தளவாடங்கள் தயாரிப்பில் கர்நாடகம் வளர்ச்சி அடைந்து வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,:-
ஆலோசனை
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டததில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
98 வெளிநாட்டு பிரதிநிதிகள்
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நாளை (அதாவதுஇன்று) விமான கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இது ஒரு மிகப்பெரிய கண்காட்சி ஆகும். வெளிநாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள், விமானப்படை செயல் அதிகாரிகள் பங்கேற்க உள்னர். 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்இந்த கண்காட்சி நடக்கிறது. 800 அரங்குகள், 98 வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்கிறார்கள்.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்தலைமையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. முன்பு விமான தளவாடங்களை நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கினோம். தற்போது நாம் உள்நாட்டிலேயே அதிநவீன தளவாடங்கள், உபகரணங்களை தயாரிக்கிறோம். விமான தளவாடங்கள் தயாரிப்பில் கர்நாடகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
67 சதவீதம் கர்நாடகத்தில் உற்பத்தி
இதற்கு முக்கிய காரணம் பெங்களூருவில் கடந்த 1940-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனம் தொடங்கப்பட்டதாகும். இதுதவிர பி.எச்.இ.எல், டி.ஆர்.டி.ஓ. பெங்களூருவில் அமைந்துள்ளது. 1960-ம் ஆண்டு பெங்களூருவில் இஸ்ரோவும் செயல்பட தொடங்கியது. நாட்டில் 67 சதவீத விமான உதிரி பாகங்கள், தளவாடங்கள் கர்நாடகத்திலேயே உற்பத்தி செய்யப்படுவது நமக்கு கிடைத்த பெருமை ஆகும்.
எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா 2023 விமான கண்காட்சி மக்கள் மனதில் என்றும் நினைத்து நிற்கும். பெங்களூருவில் விமான கண்காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.