துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி மரணம்: கர்நாடகம் நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்துவிட்டது - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேதனை


துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி மரணம்: கர்நாடகம் நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்துவிட்டது - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேதனை
x
தினத்தந்தி 23 Oct 2022 6:45 PM GMT (Updated: 23 Oct 2022 6:46 PM GMT)

துணை சபாநாயகர் ஆனந்த் மாமணியின் மறைவு, கர்நாடகத்தில் நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்துவிட்டதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை அஞ்சலி

பெங்களூரு மணிப்பால் ஆஸ்பத்திரியில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி நேற்று முன்தினம் நள்ளிரவு மரணம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் உடனடியாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

பின்னர் நேற்று காலையில் ஆர்.டி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தந்தையை போன்று மகனும்...

கர்நாடக சட்டசபையின் துணை சபாநாயகரான ஆனந்த் மாமணிக்கு 56 வயது தான் ஆகிறது. இந்த சிறிய வயதில் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனந்த் மாமணிக்கு முதலில் கல்லீரல் பிரச்சினை தான் இருந்தது. அந்த பிரச்சினை நாளடைவில் புற்றுநோயாக மாறி இருந்தது. இதற்காக சென்னைக்கு சென்று கூட அவர் சிகிச்சை பெற்றிருந்தார். அங்கிருந்து பெங்களூருவுக்கு வந்து தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி ஆனந்த் மாமணி உயிர் இழந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனந்த் மாமணியின் தந்தையும் துணை சபாநாயகராக இருந்த போது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். தற்போது ஆனந்த் மாமணி, துணை சபாநாயகராக இருக்கும்போது புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார். ஆனந்த் மாமணியின் சகோதரர் மற்றும் உறவினரும் உடல் நலக்குறைவால் உயிர் இழந்திருந்தார்கள். அவரது குடும்பத்தினருக்கு உடல் நல பிரச்சினை பெரும் இழப்பை கொடுத்துள்ளது.

கர்நாடகத்திற்கு மிகப்பெரிய இழப்பு

ஆனந்த் மாமணி கர்நாடகத்தில் வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அரசியலில் ஈடுபாடு இருந்தாலும், விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருந்தார். மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். குறிப்பாக நீர்ப்பாசன திட்டங்கள் மீதும், பெலகாவி மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருந்தார்.

துணை சபாநாயகர் ஆனந்த் மாமணியின் மறைவு, கர்நாடகம் ஒரு நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்து விட்டது. இது கர்நாடகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். வளர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய தலைவரை இழந்திருப்பது கர்நாடக பா.ஜனதாவுக்கும் பெரிய இழப்பை கொடுத்துள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story