புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வழங்கிறார்


புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வழங்கிறார்
x

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் கர்நாடக ரத்னா விருது இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படுகிறது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

பெங்களூரு:

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார்.

மிக உயரிய விருது

இவர் மறைந்த நடிகர் ராஜ்குமார்- பர்வதம்மா ராஜ்குமார் தம்பதியின் இளைய மகன் ஆவார். ரசிகர்களால் பவர்

ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித்ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

45 வயதில் அவர் மரணம் அடைந்தது கன்னடர்களை துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் திரைத்துறையில் பணியாற்றி கொண்டே, மற்றொருபுறம் சமூக சேவைகளை ஆற்றி வந்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வந்தார். சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்து கன்னட திரைத்துறையில் தனக்கு என்று தனி முத்திரை பதித்தார்.

அவரது இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள், பொதுமக்கள்,

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கர்நாடக ரத்னா விருது

இந்த நிலையில் புனித் ராஜ்குமாருக்கு நவம்பர் 1-ந் தேதி அதாவது கர்நாடகம் உதயமான தினத்தன்று கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி அறிவித்தார்.

அதன்படி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு விதான சவுதாவின் முன்பகுதி படிக்கட்டுகளில் நடக்கிறது. இதில் அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்குகிறார். இந்த விழாவில் கவுரவ விருந்தினர்களாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி, மேல்-சபை தலைவர் ரகுநாத் மல்காபுரே, சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர்., இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அதிகாரபூர்வமாக அழைப்பிதழ்

விழாவில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், பி.சி.மோகன் எம்.பி., ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவையொட்டி மந்திரிகள் ஆர்.அசோக், சுனில்குமார் ஆகியோர் சதாசிவநகரில் உள்ள புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாருக்கு அதிகாரபூர்வமாக அழைப்பிதழ் வழங்கினர். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அஸ்வினி புனித் ராஜ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்தார்.

இசை நிகழ்ச்சி

இந்த விழாவில் 8 ஆயிரம் பேர் அமர இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. இதில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருது வழங்கப்படுவதற்கு முன்னதாக ஒரு மணி நேரம் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் புனித் ராஜ்குமார் நடித்த படங்களின் பாடல்கள் இடம் பெற உள்ளன. இந்த விழாவையொட்டி விதான சவுதா முன்பகுதியில் உள்ள அம்பேத்கர் வீதி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுவரை விருது பெற்றவர்கள் விவரம்

கர்நாடகத்தில் இதுவரை 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10-வது நபராக புனித் ராஜ்குமாருக்கு மறைவுக்கு பிந்தைய நிலையில் இந்த விருது வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் 1992-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

அதே ஆண்டில் முதல் நபராக தேசியகவி குவெம்புவுக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கி கவிரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே ஆண்டில் நடிகர் ராஜ்குமார், 1999-ம் ஆண்டு முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பா, 2000-ம் ஆண்டு அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், 2001-ம் ஆண்டு டாக்டர் தேவிஷெட்டி, 2005-ம் ஆண்டு பீம்சென் ஜோஷி, 2007-ம் ஆண்டு மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி, 2008-ம் ஆண்டு எழுத்தாளர் ஜவரேகவுடா, 2009-ம் ஆண்டு தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவில் தலைவர் வீரேந்திர ஹெக்டே ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்குமார்-புனித் ராஜ்குமாருக்கு கவுரவம்

கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது நடிகர் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. அவரது மகனான புனித் ராஜ்குமாருக்கு தற்போது 10-வதாக இந்த கர்நாடக ரத்னா விருது கிடைத்துள்ளது. இது ராஜ்குமார்-புனித் ராஜ்குமார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக ரத்னா விருது பெறுபவர்களுக்கு ஒரு வெள்ளி தட்டு, 50 கிராம் தங்க பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் முதல் முறையாக தந்தை-மகனான ராஜ்குமார்- புனித்ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு கிடைத்த பெரிய கவுரவம் ஆகும்.


Next Story