டெல்லியை நியூயார்க், டோக்கியோவுடன் ஒப்பிட்டு பார்க்கவும்: கெஜ்ரிவாலுக்கு அசாம் முதல்-மந்திரி அறிவுரை!
அசாமில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் அரசுப் பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடு பரபரப்பை கிளப்பியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும் இடையே சமூக வலைதளமான டுவிட்டரில் மோதல் வலுத்து வருகிறது.
அசாமில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் அரசுப் பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடு பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று, அசாமில் மோசமான முடிவுகள் காரணமாக அசாம் மாநில அரசு 34 பள்ளிகளை மூடியதாக வெளியான செய்திகளை குறிப்பிட்டு அத்தகைய அறிக்கைக்கான இணைப்பை கெஜ்ரிவால் டுவிட்டரில் பகிர்ந்தார்.
இதனை தொடர்ந்து இருவருக்குமிடையே அரசுப் பள்ளிகள் சிறப்பாக உள்ளதா என்ற விவாதம் தொடருகிறது.
இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
டெல்லியில் கெஜ்ரிவால் 1,200 பள்ளிகளை நடத்துகிறார், ஆனால் அசாமில் நான் 40,000 பள்ளிகளை நடத்துகிறேன்.
முகலாயர்கள் காலத்திலிருந்தே இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்து வருகிறது. கெஜ்ரிவால் டெல்லியை கவுகாத்தி மற்றும் ஷில்லாங்குடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக நியூயார்க் மற்றும் டோக்கியோவுடன் ஒப்பிட வேண்டும்.
கெஜ்ரிவால் அவர்கள், தன்னை அசாமுக்கு அழைக்க வேண்டும் என்று விரும்பினார். நான் ஏற்கனவே டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவை அசாமுக்கு அழைத்தேன், இது குறித்து அவருக்கும் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்திருக்க வேண்டும். ஆகவே அரவிந்த் கெஜ்ரிவால் விரும்பினால் அவருடன் அசாம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.