கேரளாவும், தமிழ்நாடும் ஒரே முற்போக்கு பாரம்பரியத்தை கொண்டது - பினராயி விஜயன்
போராட்டங்களை பொறுத்தவரை கேரளாவும், தமிழ்நாடும் ஒரே முற்போக்கு பாரம்பரியத்தை கொண்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடந்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வைக்கம் சத்தியாகிரக போராட்டம் நாட்டுக்கே முன்னுதாரணமாக இருந்தது. இந்த போராட்டம் ஈடு இணையற்ற போராட்டம். ஒரே கொள்கைக்காக ஒன்று கூடினால் மட்டுமே மறுமலர்ச்சி ஏற்படும். தனி மனித முயற்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்தாது என்பதை வைக்கம் சத்தியாகிரக போராட்டம் நமக்கு உணர்த்தியது. கொள்கையை நிலைநாட்ட நடத்தப்படும் போராட்டங்களை பொறுத்தவரை கேரளாவும், தமிழ்நாடும் ஒரே முற்போக்கு பாரம்பரியத்தை கொண்டுள்ளது.
திராவிட பாரம்பரியத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருகிறார். வைக்கம் சத்தியாகிரக போராட்டம் தமிழ்நாடும் பெருமை கொள்ளும் போராட்டமாக அமைந்தது சிறப்பு வாய்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.