மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கேரள அரசு புறக்கணிக்கிறது மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜா குற்றச்சாட்டு


மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கேரள அரசு புறக்கணிக்கிறது மத்திய  மந்திரி ஷோபா கரந்தலாஜா குற்றச்சாட்டு
x

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கேரள அரசு புறக்கணிக்கிறது என்று விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கரந்தலாஜா குற்றம் சாட்டினார்.

பெரும்பாவூர்,

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கரந்தலாஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் அட்டகாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை முற்றிலுமாக ஒழித்து விவசாயிகளை காப்பாற்றுவது என்பது இயலாத காரியம். ஆனால் அவற்றின் தாக்குதல்களில் இருந்து விவசாயிகளை காப்பாற்றுவது அவசியம்.

அதற்கு கேரள அரசு மத்திய அரசை அணுகியிருந்தது. அப்போது அதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், அதற்கான செயல் திட்டங்களை தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதுபோன்ற எந்தவித செயல் திட்டத்தையும் மாநில அரசு மத்திய அரசுக்கு வழங்கவில்லை.

மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வருகிறது. ஆனால் கேரள அரசு இவற்றில் பல திட்டங்களை புறக்கணிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசின் மக்களுக்கு பலனளிக்கும் பல நல்ல திட்டங்கள் கேரள மக்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு மாநில அரசு காட்டி வரும் உதாசினமே முக்கிய காரணமாகும். கேரள விவசாயிகளுக்கு ரசாயன உர மானியம் கிடைக்கவில்லை என்று கூறுவதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ரசாயன உரங்களின் விலை அதிகரிப்பு மூலம் கேரள விவசாயிகள் பாதித்திருப்பதாக மத்திய அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது. இதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுத்து விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். தங்கம் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் கூறி உள்ள ரகசிய வாக்குமூலத்தில் கேரள முதல்-மந்திரி மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆகவே இந்த வழக்கு விசாரணையில் கேரள முதல்-மந்திரியின் குடும்பத்தினரையும் உட்படுத்த வேண்டும் என்பதே சரியான செயலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story