உலகக் கோப்பை கால்பந்து போட்டி: அர்ஜென்டினா சாம்பியன்; 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கி அசத்திய ரசிகர்...!


உலகக் கோப்பை கால்பந்து போட்டி: அர்ஜென்டினா சாம்பியன்; 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கி அசத்திய ரசிகர்...!
x
தினத்தந்தி 19 Dec 2022 4:23 PM GMT (Updated: 19 Dec 2022 4:24 PM GMT)

அர்ஜென்டினா அணியை வெற்றியை தொடர்ந்து கேரளாவில் உணவக உரிமையாளர் ஒருவர் 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கிய சம்பவம் அரங்கேறிஉள்ளது.

திருவனந்தபுரம்,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்சை சாய்த்து 3-வதுமுறையாக கோப்பையை கையில் ஏந்தியது. இந்த வெற்றியால் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா தேசமே கொண்டாட்டத்தில் குலுங்கியது. மகுடம் சூடிய அர்ஜென்டினாவுக்கு ரூ.342 கோடியும், 2-வது இடத்தை பிடித்த பிரான்சுக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது. உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் (26 ஆட்டம்) என்ற சாதனையை மெஸ்சி படைத்தார்.

திரில்...பரவசம்...ஆச்சரியம் இப்படி இறுதிப்போட்டிக்குரிய எல்லா அம்சங்களை கொண்டிருந்த உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

அர்ஜெண்டினாவின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும், அதே நிலை கானப்பட்டது. குறிப்பாக கேரளா, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், அர்ஜெண்டினாவின் கொடியை கைகளில் ஏந்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில், கேரளாவில் உணவக உரிமையாளர் ஒருவர் 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கிய சுவாரஷ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. கால்பந்தாட்டத்திற்கு கேரளாவில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கும்போதே அவர்களின் விருப்பமான வீரர்களுக்கு பெரிய அளவில் பேனர்கள் வைத்து கொண்டாடினர்.மேலும், கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், திருச்சூரில் உணவக உரிமையாளர் ஷிபு என்பவர், மெஸ்ஸி தலைமையிலான

அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகர் ஆவர். அவர் போட்டியின்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றால் தாம் நடத்தி வரும் உணவகத்தில் 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து ஷிபு, இன்று தனது உணவகத்திற்கு முதலில் வரும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கி அசத்தினா. இதற்காக அவரின் கடைக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் குவிந்தனர். அதிக அளவில் கூட்டம் குவிந்ததால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள் என்பதால், அவர்களும் சளைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணியை பரிமாறி மகிழ்ந்தனர்.


Next Story