கேரளா: பிஎப்ஐ அமைப்பினரின் வீடுகள் போலீசார் அதிரடி ரெய்டு

என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
திருவனந்தபுரம்,
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 23-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
தமிழ்நாடு, கேரளா உள்பட நாடு முழுவதும் 11 மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சர்ச்சைக்குரிய ஆவணங்கள், செல்போன், லேப்டாப்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின் முடிவில் நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், அதிகபட்சமாக 22 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். அதேபோல், தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் கடந்த 23 -ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது.
பஸ்கள், கார்கள், ஆம்புலன்ஸ்கள், கடைகள் மீது கல்வீச்சு தாக்குதல்கள் நடைபெற்றது. பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 23-ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்திய நிலையில் கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் வீடுகளில் மாநில போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
கன்னூர் மாவட்டத்தில் கண்ணபுரம், மத்தனூர், இரிட்டி, பப்பிசிசேரி, வாழப்பட்டனம் ஆகிய பகுதிகளில் பிஎப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் நேற்று மாலை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது லேப்டாப்கள், வங்கி கணக்கு விவரங்கள், செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.