மணிப்பூர் மந்திரியின் உதவியாளர் கடத்தல் - போலீஸ் விசாரணை
மணிப்பூர் மந்திரியின் தனிப்பட்ட உதவியாளர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தின் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி எல்.சுசிந்த்ரோவின் தனிப்பட்ட உதவியாளர் எஸ்.சோமரேந்திரோ(43) கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இன்று கடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து தெளிவாக தெரியவில்லை எனவும், இந்த சம்பவத்திற்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ள போலீசார், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று இரவு மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் ஒயினம் நபகிஷோரின் இல்லத்தின் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் 5 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பிஷ்ணுபூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.