தேர்தல்களில் 86 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த கின்னர் சாதனையாளர்


தேர்தல்களில் 86 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த கின்னர் சாதனையாளர்
x

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஜி.வி.ரங்கசாமி தேர்தல்களில் 86 முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பெங்களூரு:-

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் போது பெரும்பாலும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் பலமான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் களம் இறக்குவது வழக்கம். மேலும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வித்தியாசமான பிரசாரங்கள் மேற்கொள்வதும் உண்டு. இதேபோல் சுயேச்சைகளாக களமிறங்க விரும்பும் சிலர் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் பல முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதும் வழக்கம்.

இதுபோன்று கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜி.வி.ரங்கசாமி. இவர் கடந்த 1967-ம் ஆண்டு மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஹொட்டே(வயிறு) என்ற கட்சியை தொடங்கினார். மேலும் அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரெயில்வே மந்திரியாக இருந்த கெங்கல் ஹனுமந்தய்யாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அப்போது பஞ்சத்தை போக்க ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு கொடுக்கப்படும் என அதிரடி தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். மேலும் மாநிலம் முழுவதும் சைக்கிள் மூலம் பிரசாரம் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். இதேபோல் 1970-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்திக்கு எதிராக இவர் களம் இறங்கினார். ஆனால் அந்த தேர்தலிலும் அவர் தோல்வி தழுவினார்.

முன்னாள் பிரதமர்கள் ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், முன்னாள் முதல்-மந்திரியான எஸ்.எம்.கிருஷ்ணா, ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு ஜி.வி.ரங்கசாமி தோல்வி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒரு முறை இரண்டு முறை அல்ல மாநிலத்தில் நடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மொத்தம் 86 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்ற பெயருக்கு ஜி.வி.ரங்கசாமி சொந்தக்காரர் ஆனார். இவர் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் விமான சின்னத்தில் களமிறங்கியது கூடுதல் தகவல்.

பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய இவர், அதற்காக கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார். இவ்வாறு அடிப்படையில் சமூகவாதியாக வாழ்ந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு உயிர் இழந்தார். இந்தியாவிலேயே அதிகமுறை சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ரங்கசாமி என்பதால் இவரது பெயர் 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story