கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க கவர்னர் வலியுறுத்தல்
கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு அம் மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையீடு போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வந்தது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், விளக்கம் கேட்டும் கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் நோட்டீசு அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவு கேரள அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் பிரச்சினையில் கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்ட நிலையில், கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் வலியுறுத்தி உள்ளார். தமது ஒப்புதலை மந்திரி பாலகோபால் இழந்துவிட்டதாக கூறி அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கேரளாவை புரிந்துகொள்ள முடியாது என மந்திரி பாலகோபால் பேசியுள்ளார். அமைச்சரை பதவி நீக்கக் கோரிய ஆளுரநின் நடவடிக்கையால் அவருக்கும் ஆட்சிக்கும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியது குறிப்பிடத்தக்கது.