கிரக லட்சுமி திட்ட விண்ணப்பம் பெறுவதில் கோலார் மாவட்டத்திற்கு 19-வது இடம்
கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் அதிகளவு விண்ணப்பம் செய்தவர்கள் பட்டியலில் கோலார் மாவட்டம் 19-வது இடத்தில் இருப்பதாக கலெக்டர் அக்ரம் பாஷா தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:-
கிரக லட்சுமி திட்ட விண்ணப்பம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி, 200 யூனிட்டிற்கு கீழ் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகை உள்பட 5 உத்தரவாத திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று வாக்குறு அளித்தது. அதன்படி இலவச பஸ் பயணம், அன்னபாக்ய திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டமும் அமலுக்கு வந்துவிட்டது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் என்ற கிரக லட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த உதவி தொகை குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும்.மேலும் 1 உத்தரவாத திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு குடும்ப தலைவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி கோலார் மாவட்டத்தில் கிரக லட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் குடும்ப தலைவிகள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்காக பெங்களூரு ஒன், கர்நாடக ஒன் உள்பட பல்வேறு மையங்களில் விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கோலார் மாவட்டத்திற்கு 19-வது இடம்
இதில் சில இடங்களில் சர்வர் பிரச்சினையால் கிரக லட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் முடங்கியது. இதுகுறித்து கோலார் கலெக்டர் அக்ரம் பாஷாவிற்கு புகார் வந்தது. உடனே அவர் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து சர்வர் பிரச்சினை சரியானது. இதை தொடர்ந்து கிரக லட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் துரிதமாக நடந்தது. இந்தநிலையில் கர்நாடக முழுவதும் எந்த மாவட்டங்களில் அதிகளவு கிரகலட்சுமி திட்டத்திற்கு குடும்ப தலைவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி கர்நாடகத்தில் கோலார் மாவட்டம் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதில் 19-வது இடத்தை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கலெக்டர் எடுத்த நடவடிக்கைதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கிரக லட்சுமி திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அவர்கள் விண்ணப்பிக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
பெருமை அளிக்கிறது
இதனால் கோலார் மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் கிரக லட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் கால கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் வரும் நாட்களில் அதிகளவு குடும்ப தலைவிகள் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா கூறுகையில்; கிரக லட்சுமி திட்டத்தில் அதிகளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பவர்கள் பட்டியலில் கோலார் மாவட்டம் 19-வது இடத்தில் உள்ளது பெருமை அளிக்கிறது. இன்னும் யார், யார் விண்ணப்பிக்கவில்லையோ அவர்களுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. உடனே அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதற்கான வாய்ப்பு, வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.