கோலார் தங்கவயல் மினி விதானசவுதா கட்டிடம் வருகிற 21-ந்தேதி திறப்பு
கோலார் தங்கவயல் மினி விதானசவுதா கட்டிடம் வருகிற 21-ந்தேதி திறக்கப்படும் என்று ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயல் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின் தாலுகா நிர்வாகம் அமைய தேவையான நடவடிக்கைகளை ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. மேற்கொண்டார். அதன்படி ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் நகரில் ரூ.10 கோடி செலவில் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் மினி விதான சவுதா கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் நேற்று மினி விதானசவுதா கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோலார் தங்கவயல் மினி விதானசவுதா கட்டிடம் வருகிற 21-ந்தேதி திறப்பு
ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. பேட்டி
கோலார் தங்கவயல் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டபோது வருவாய் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை என பல்வேறு துறைகள் தனித்தனியாக தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வந்தன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். தற்போது அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் மினி விதானசவுதா அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இது கோலார் தங்கவயல் மக்களின் நீண்டநாள் கனவு ஆகும். இந்த மினி விதானசவுதா கட்டிடம் வருகிற 21-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதில் மந்திரிகள் ஆர்.அசோக், முனிரத்னா உள்பட பலர் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.