கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு - சக டாக்டர்கள் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் சந்தேகம்


கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு - சக டாக்டர்கள் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் சந்தேகம்
x

கொல்கத்தா மருத்துவமனையில் தங்கள் மகளுடன் பணியாற்றிய சக டாக்டர்கள் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ந்தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள் மற்றும் இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணுடன் பணியாற்றிய சக டாக்டர்கள் மீது, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கொலை சம்பவத்தில் பல நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்த பெண்ணின் பெற்றோர் எங்களிடம் தெரிவித்தனர். ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் தங்கள் மகளுடன் பணிபுரிந்த சில டாக்டர்களின் பெயர்களை அவர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சுமார் 30 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.


Next Story