காங். முன்னாள் எம்.பி.க்கள் இணைந்தனர் கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


காங். முன்னாள் எம்.பி.க்கள் இணைந்தனர்  கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும்-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

காங். முன்னாள் எம்.பி.க்கள் இணைந்தனர் கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கள் இணையும் விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.

மீண்டும் வெற்றி பெறும்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கள் முத்தஹனுமேகவுடா, நடிகர் சசிகுமார், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில்குமார் உள்ளிட்டோர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரது முன்னிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அவர்களுக்கு பா.ஜனதா தலைவர்கள் கட்சி கொடியை வழங்கி கட்சியில் சேர்த்துக்கொண்டனர்.

இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜனதாவில் சேருவதை பார்க்கும்போது, வருகிற சட்டசபை தோ்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்பதை வெளிக்காட்டுகிறது. கர்நாடக அரசியல் புதிய திருப்புமுனையை சந்தித்து வருகிறது. வட கர்நாடகத்தில் நாங்கள் நடத்திய ஜனசங்கல்ப யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் கட்சி மக்களின் பக்கம் நின்று பணியாற்றுகிறது.

இரட்டை என்ஜின் அரசு

பா.ஜனதாவுக்கு மக்களின் ஆதரவு பெரிய அலையாக மாறி வருகிறது. காங்கிரஸ் கட்சி மக்களின் ஆதரவை இழந்து வருகிறது. சித்தராமையா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அவரது மந்திரிசபையில் இருந்த மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்த பிறகும் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் சேர்ந்த மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த முயற்சியும் சில மாதங்களில் தோல்வி அடைந்தது.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக இரட்டை என்ஜின் அரசு பாடுபட்டு வருகிறது. முன்னாள் எம்.பி. முத்தஹனுமேகவுடா பா.ஜனதாவில் சேர்ந்திருப்பதால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். இன்னொரு முன்னாள் எம்.பி.யும், நடிகருமான சசிகுமாரும் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். அவர்களை நான் வரவேற்கிறேன்.

என்ன பதவி

நாட்டில் பா.ஜனதா கட்சி வலுவாக வளர்ந்து வருகிறது. கட்சியில் யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்பதை தனிப்பட்ட தலைவர் முடிவு செய்வது இல்லை. அதை கட்சி மேலிடம் முடிவு செய்கிறது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story