கே.ஆர்.புரம் தாசில்தாருக்கு 7 நாள் போலீஸ் காவல்
சொத்து குவிப்பு வழக்கில் கைதான கே.ஆர்.புரம் தாசில்தாருக்கு 7 நாள் போலீஸ் காவல்விடுத்து லோக் அயுக்தா கோர்ட்டு உத்தரவு
பெங்களூரு:-
கர்நாடகத்தில் லோக் அயுக்தா போலீசார் சார்பில் அவ்வப்போது அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி பெங்களூரு உள்பட மாநிலத்தில் 15 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கத்தை, கத்தையாக பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவை சிக்கின.
பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராய்க்கு சொந்தமான இடங்களில் மட்டும் விலை உயர்ந்த கார்கள், கைக்கெடிகாரங்கள், வைரம் மற்றும் தங்க நகைகள் உள்பட ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்து மற்றும் ஆவணங்கள் இருந்தது தெரிந்துள்ளது. இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராயை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று அவரை ேலாக் அயுக்தா கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, தாசில்தார் அஜித்குமார் ராயை, 7 நாட்கள் காவலில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும் தாசில்தாரை, அவரது சொந்த ஊரான புத்தூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் லோக் அயுக்தா போலீசாருக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தாசில்தார் அஜித்குமார் ராய், தனது உறவினர்கள் நண்பர்கள் என பலரது பெயர்களில் சொத்துகளை வாங்கியது தெரிந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக லோக் அயுக்தா சார்பில் தாசில்தாரின் நண்பர்கள் கவுரவ், ஹர் வர்த்தன் மற்றும் சகோதரர் ஆஷிக் ராய் உள்பட 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.