கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது: 100 ஆண்டு பழமையான கோவில் வெளியே தெரிகிறது


கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது: 100 ஆண்டு பழமையான கோவில் வெளியே தெரிகிறது
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்ததால் 100 ஆண்டுகள் பழமையான கோவில் வெளியே தெரிகிறது.

மண்டியா-

கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுெவன குறைந்ததால் 100 ஆண்டுகள் பழமையான கோவில் ெவளியே தெரிகிறது.

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புகழ்பெற்ற கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அணை கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநில மக்களின் உயிர் நாடியாக விளங்குகிறது.

இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதி குடகு மாவட்டம் ஆகும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான ெவயில் சுட்டெரித்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் மழையும் பெய்யவில்லை. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து இன்றி காணப்பட்டது.

80 அடி குறைந்தது

மேலும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நீர்வரத்து குறைவு மற்றும் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு போன்ற காரணங்களால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுெவன குறைந்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்றைய நிலவரப்படி 80 அடி தண்ணீர் உள்ளது.

அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியுள்ளது.

கோவில் வெளியே தெரிகிறது

மேலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்தேக்க பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான நாராயணசாமி கோவில் முழுமையாக வெளியே தெரிகிறது. அதாவது கே.ஆர்.எஸ். அணை கட்டும் முன்பு நீர் தேக்க பகுதியில் உள்ள அனந்தூா் கிராம மக்கள் இங்குள்ள நாராயணசாமி கோவிலுக்கு சென்று தினமும் பூஜை செய்து வந்தனர். ஆனால் கே.ஆர்.எஸ். அணை கட்டப்பட்ட பிறகு அந்த கோவில் நீரில் மூழ்கியது.

கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு அணை நீர்மட்டம் 80 அடிக்கு கீழே குறையும் போது அந்த கோவில் வெளியே தெரிந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கோவில் வெளியே தெரிகிறது. அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயரும் போது நாராயணசாமி கோவில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி விடும்.

தற்போது அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


Next Story