கூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்-முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
குமாரசாமி கையை காங்கிரஸ் கட்டவில்லை என்றும் கூட்டணி அரசு கவிழ்வதற்கு அவரே காரணம் என்றும் முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் இல்லை
சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பா.ஜனதாவுக்கு விருப்பம் இல்லை. அதனால் வெளியே சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் 3 வாரம் நடந்துள்ளது. வழக்கமாக 2 வாரம் தான் நடைபெறும். இந்த முறை 3 வாரம் நடந்திருக்கிறது. சட்டசபையை நடத்த விடாமல் கூச்சல் போட்டவர்கள் பா.ஜனதாவினர் தான். மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க முடியாமல் சபையை முடக்கியவர்களும் அவர்கள் தான்.
தற்போது மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க அவகாசம் வழங்கவில்லை என்று கூறுவது சரியில்லை. சட்டத்தொடரில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தின் காரணமாக தான் சபாநாயகரே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். 14 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். ஒரு முறை கூட எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் இருந்ததில்லை. தற்போது பா.ஜனதாவினர் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காத காரணத்தால், எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலேயே பட்ஜெட் மீதான விவாதத்தின் கீழ் பதில் அளித்து பேசி உள்ளேன்.
குமாரசாமி கையை கட்டவில்லை
காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் தனது கை கட்டப்பட்டு இருந்ததாக குமாரசாமி கூறி இருக்கிறார். குமாரசாமி கையை கட்டி இருந்தால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்திருக்க முடியுமா?. நாங்கள் ஒத்துழைப்பு அளித்ததால் தான் விவசாயிகள் கடனை குமாரசாமி தள்ளுபடி செய்தார். மேலும் சில திட்டங்களையும் செயல்படுத்தினார்.
கூட்டணி ஆட்சியில் குமாரசாமியின் கையை காங்கிரஸ் கட்டவில்லை. கூட்டணி அரசு கவிழ்வதற்கு குமாரசாமியே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.